உலகம் முழுவதும் தற்போது இரண்டு நபர்களின் பெயர்கள் தொடர்ச்சியாக உச்சரிக்கப்பட்டு வருகின்றது. ஓன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொன்று யுக்ரேன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி! இவர்களில் அதிக கவனம் ஈர்த்த நபரென்றால் அது வொலாடிமிர் ஸெலன்ஸ்கிதான்.
ஒரு யானையை எறும்பு எதிர்கொள்வதுபோல் இன்று ரஷ்யா எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தை துணிச்சலுடன் எதிர்கொண்டுவருகின்றது யுக்ரேன். யுக்ரேனின் இந்த அசாத்திய துணிச்சலுக்கு காரணம் அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கிதான். 1978ல் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த க்ரிவி ரிஹில் பிறந்த வொலாடிமிர் ஓலெக்ஸாண்ட்ரோவிச் ஸெலன்ஸ்கி! யூதபின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஸெலன்ஸ்கியின் பள்ளிப்படிப்பு முதல் ஆரம்ப வாழ்க்கை முழுவதும் ரஷ்ய மொழியை சுற்றியே இருந்தது. இவரது தந்தை பல்கலைக்கழகமொன்றின் சைபர் மற்றும் கணினி மென்பொருள் துறையின் தலைவர், தாய் ஓர் பொறியியலாளர். கீவ் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த ஸெலன்ஸ்கிக்கு கலைகள் மீது ஆர்வம் அதிகம். இதனால் 1995ஆம் ஆண்டு Stand-Up comedyகளில் தோன்ற ஆரம்பித்து பின்னர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் அளவிற்கு மக்களிடம் பிரபலமானார். குறிப்பாக உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆதிக்க அரசியலை நையாண்டி செய்வதே ஸெலன்ஸ்கியின் மூலம் 2015ஆம் ஆண்டு “Servant of the People" என்கிற தொலைகாட்சி தொடரில் பள்ளி ஆசிரியர் எப்படி ஒரு நாட்டின் பிரதமர் ஆகின்றார் எனும் கதையில் பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தார். மக்கள் மத்தியில் இத்தொடர் பெரும் வரவேற்பினை பெறவே, பின்னாளில் “Servant of the People”எனும் பெயரிலேயே ஓர் கட்சியை ஆரம்பித்து 2019ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 73% வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றார்.
யுக்ரேனின் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டஸெலன்ஸ்கி குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை பெற்று யுக்ரேனின் அதிபரானார்.அந்த நம்பிக்கைதான் ஸெலன்ஸ்கியின் இன்றைய மிகப்பெரிய பலமாக மாறியிருக்கின்றது. இன்று புடின் எனும் மாபெரும் சக்திவாய்ந்த ஒரு நபருக்கு எதிராகவும், ரஷ்யா எனும் பலம் கொண்ட சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் ஸெலன்ஸ்கி துணிச்சலுடன் முன்னிற்கிறார்.
யுக்ரேன் நம்பியிருந்த சர்வதேச நாடுகள் அவரை கைவிட்டாலும் யுக்ரேன் மக்கள் அவரை கைவிடுவதாக இல்லை. மாறாக எமது நாட்டிற்காக யுக்ரேனின் எதிர்கால சந்ததிகளுக்காக “நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்” என தங்கள் தலைவருக்கு தோள் கொடுத்து நிற்பது முழு உலகத்தையும் வியப்பில் ஆழ்த்துவதாகவேயுள்ளது.
எழுத்து: பிரியா ராமநாதன் | படவடிவமைப்பு - Jamie Alphonsus
Comments
Post a Comment