வேதக்காலத்தில் பால், பால்குடம், முளைப்பாலிகை, விளக்கு போன்றவற்றை வைக்க அரிசி மா, மஞ்சள் பொடி போன்றவற்றை பயன்படுத்தி தனித்தனி கட்டங்கள் வரையப்பட்டதாகவும் இதுவே காலப் போக்கில் கட்டக்கோலங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது.
அக்னி வளர்க்க ஒன்பது குழிகளாக ஓமகுண்டம் அமைப்பார்கள், அக்குழிகளை இணைக்க போடப்பட்ட கோடுகளே புள்ளிக் கோலங்களாகின. சில விசேஷமான கோலங்கள் விசேஷமான பலனைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. நுனியில் சக்கரம் போட்டு “ஆறுமுக்கோண கோலம்“ போடப்படுகையில் துர்சக்திகள் வீட்டில் நுழையாது என்பர்.
வெண்மையும் சிவப்பும் இணைந்த கோலம் சிவசக்தி ஐக்கியமாக் குறிப்பிடப்படுகிறது.
கோலங்களில் பல்வேறு வகையுண்டு
அரிசி மாவினால் போடப்படும் மாக்கோலம், புள்ளிக்கோலம், நேர்ப்புள்ளி கோலம், இழைக்கோலம், சிக்குக்கோலம், அங்கக்கோலம், பூக்கோலம், பயறுக்கோலம், மணற்கோலம், வெள்ளைமாவு கோலம், பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தயகோலம், வட்டககோலம், பாம்புக்கோலம், மனைக்கோலம், கம்பிகோலம், தந்திரிக்கோலம் என சொல்லிக்கொண்டே போகலாம். கோலம் ஒருவகை யந்திரமாகவும் கருதப்படுகிறது. அதனாலேயே வீட்டு வாசலில் போடப்பட்டது.
வடமாநிலங்களில் 'ரங்கோலி" எனும் வண்ணக் கோலம் மிகமிக பிரசித்தமானது. காரணம் 'ஹோலி" என்ற பெயருடைய முனிவரின் மனைவி தன் கணவர் இறந்ததும் அவரது உருவத்தை பல வண்ண பொடிகளால் வரைந்து அதன் மீது படுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் அந்த ஹோலியின் நினைவாக பல வண்ணங்களில் இடப்பட்ட கோலமே ரங்கோலி என கூறப்படுவதாகவும் வடமொழிக்கதைகள் உண்டு.
கோலம் தமிழர்களால்தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. உண்மையில் கோலம் வீட்டு முகப்பின் அழகினை அதிகரிக்கச் செய்யும் ஒரு எளிய உத்தி. தினமும் வகை வகையான கோலம் போடுதல் இந்த அழகினை இன்னும் மேம்படுத்தும். இது ஒரு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும் வேலை என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அரிசிமா பொடியால் கோலம் போடும் முறை ஏன்?
அதனால் வாசலில் உள்ள அணில், காக்கை, குருவி முதலியன உணவுக்காக அலைய வேண்டியதில்லை. அரிசிமா கோலங்கள் ஈ, எறும்பிற்கு உணவாகவும் அமைகின்றன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று வள்ளுவர் கூறியதும் ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்ற பாரதியையும் நாம் இங்கு நினைவுப்படுத்திகொள்வோம். மேலும் கோலம் இடுவதென்பது ஒரு எளிய உடற்பயிற்சியுமாகும்.
குனிந்து நிமிர்ந்து உடலையையும், கோல அமைப்பில், மனக்குவிப்பையும் பெறக் கூடிய ஒரு வகை யோகப்பயிற்சி என்றாலும் மிகையில்லை.
#தமிழ் கலாச்சாரம்
#தமிழர்திருநாள்
#கோலங்கள்
#தமிழர் பண்பாட்டில் கோலங்கள்
#கலாச்சாரம்
எழுத்து: பிரியா ராமநாதன்
Comments
Post a Comment